எமது நிலம் எமக்கு வேண்டும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

பரவிப்பாஞ்சானில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்,

“இராணுவமே, நீ உன் வீட்டுக்குப் போ;

நான் என் வீட்டுக்குப் போவதற்கு வழிவிடு”,

“எங்கள் நிலம் வேண்டும்”,

“இராணுவமே, எங்கள் பொருளாதார வளங்களைச் சுரண்டாதே”

உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

கடும் கண்காணிப்புக்கு மத்தியில் போராட்டம்

போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பெருமளவு பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் தொடர்ச்சியாக புகைப்படம் எடுக்கப்பட்டதுடன், புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் புலனாய்வாளர்கள் பொதுமக்களை தனித்தனியாகப் புகைப்படம் எடுத்ததாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

எனினும், இவ்வாறான கண்காணிப்பு மற்றும் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் பெருமளவான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சுமார் 200 ஏக்கர் நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்

2009ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த பின்னர், பரவிப்பாஞ்சான் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக நலன்புரி முகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருவதாகவும், தங்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடந்த மே மாதம் 28ஆம் திகதியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இரண்டாம் கட்டப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மகஜர் கையளிக்க பொலிஸார் அனுமதி மறுப்பு

போராட்டத்தின் நிறைவில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றக் கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்க முயன்றனர்.

எனினும், போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களை மாவட்டச் செயலகத்திற்குள் செல்லவிடாமல் பொலிஸார் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இரண்டு பேர் மாத்திரம் பொலிஸாரின் பாதுகாப்புடன் மாவட்டச் செயலகத்திற்குள் சென்று மகஜரை கையளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி, இருவர் மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதியான உதவி அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.

மீள்குடியேற்றம் முழுமையடைந்ததாக தெரிவிப்பு

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கரைச்சிப் பிரதேச செயலர் தெரிவித்து வருவதாகவும், ஆனால் பரவிப்பாஞ்சானில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் இன்னமும் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது சொந்த நிலங்களை விடுவித்து, அங்கு தங்களை மீள்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment