13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம்!

13ஆம் திருத்தத்திற்குள் தமிழர்களின் அரசியல் தீர்வை முடக்கும் முயற்சிக்கு எதிராகப் பேரணி

தமிழர்களின் அரசியல் தீர்வை 13ஆம் திருத்தச் சட்டத்திற்குள் முடக்கும் சதிக்கு எதிராகவும், தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தியும் நடைபெற்ற பேரணி, பல ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உரிமைக்கான எழுச்சியாகச் சிறப்பாக நடைபெற்றது.

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமான பேரணி, கிட்டு பூங்கா வரை சென்று நிறைவடைந்தது.

கிட்டு பூங்கா பிரகடனம்

‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன், தமிழ் மக்களினதும் வெகுஜன அமைப்புக்களினதும் பங்கேற்புடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 2022 ஜனவரி 30ஆம் திகதி கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது, தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு–கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், அதன் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வில் எப்போதும் உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத்தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதனை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாகவும் இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அது இறுக்கமான ஒற்றையாட்சி முறைக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும் அரசாங்கம் உறுதியாகக் கூறியுள்ளது. இந்த அரசியலமைப்பை ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது.

இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதேபோன்றதொரு சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தன. அச்சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு–கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், அதன் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்தன.

இதன் விளைவாகவே தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்ற விடயத்தைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக, சிங்கள அரசு தமிழர்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து, இங்கு பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறியது. போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையே ஆகும்.

இவ்வாறிருக்க, 1980களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க–இந்திய பூகோள அரசியல் போட்டியின் காரணமாகவே, இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது.

1987இல் இலங்கை, இந்திய நலன்சார்ந்து செயற்படத் தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி சிங்களத் தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக்கு எதிராகத் தமிழ்த் தரப்பைப் பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தத்தையே தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது.

இந்நிலையில், அப்போதைய தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தன.

2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய–சீன பூகோள அரசியல் போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே, ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புகளைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச் சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசுடன் பேரம்பேசி வருகின்றது.

இலங்கை, சீன விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளைப் பயன்படுத்தி, தமிழர்களின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எஃப்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து, 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாகக் கையொப்பமிட்ட கடிதத்தை 18.01.2022 அன்று இந்தியத் தூதுவரிடம் கையளித்துள்ளனர்.

இதன்மூலம், 13ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு–கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையை உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் உலகுக்குப் பறைசாற்றுவதற்குத் தயாராகிறார்கள்.

இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே இதனைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றைப் பிரகடனப்படுத்துகிறது:

1. தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர். 2009இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தலினூடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.

2. வடக்கு–கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், அதன் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கின்ற தீர்வுக்குப் பதிலாக, ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக — 13ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவிலோ — அமையும் எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் செயலாகவே அமையும் என்பதை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது.

3. தமிழ் மக்கள் காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியைக் கைவிட வேண்டுமென இப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்துகிறோம்.

4. இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவைப் பலப்படுத்திக்கொள்வதையோ, தனது பூகோள–அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென்னாசியப் பிராந்திய வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத் தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்பு சக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும், அக்கறையும், ஈடுபாடும் உண்டு.

ஆனால், தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாகக் கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம்.

5. தமிழ் மக்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு–கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும், அதனுடைய தனித்துவமான இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக்கூடிய ‘சமஷ்டி’ அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)

தமிழ்த் தேசியப் பேரவை

30.01.2022

Related posts

Leave a Comment