மயிலிட்டி மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த முன்னணி !
யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் மக்களின் வாழ்வுரிமை மற்றும் நில உரிமை கோரி நடத்தப்படும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேரடியாகச் சென்று தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மயிலிட்டி பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் காணி விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகளை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் இந்த நியாயமான போராட்டக் களத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று போராட்ட இடத்திற்கு விஜயம் செய்தனர்.
இன்றைய உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், கொள்கைப் பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், பருத்தித்துறை நகரபிதா டக்ளஸ் பால், மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் கட்சியின் மேலும் பல உறுப்பினர்களும் இணைந்து கொண்டு, போராட்டக் களத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தங்கள் பலமான குரலை வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர், மக்களின் நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் மண் மீட்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், மயிலிட்டி மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்களின் மண் மீட்பும் உரிமைகளும் சாத்தியமாகும் வரை மக்களுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்று போராடும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

.
