பலாலி மற்றும் வயாவிளான் பகுதிகளில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீக நிலங்களை மீளப் பெறக்கோரி, சொந்த நிலங்களை இழந்து வீடற்றவர்களாக வாழும் மக்கள் முன்னெடுத்து வரும் மண் மீட்புப் போராட்டம் நேற்றையதினம் 13-வது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான உணர்வுகளுக்கும் உரிமைப் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நேரடியாகக் களமிறங்கி ஆதரவு தெரிவித்தது.
இன்றைய 13-ஆம் வாரப் போராட்டத்தில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கொள்கைப் பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், யாழ். மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டர், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுடன் கட்சியின் உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தசாப்த காலங்களாகத் தமது சொந்த மண்ணில் வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு விரைந்து பதிலளிக்க வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.