மலையக மக்களின் உரிமைகளைப் பறித்த சட்டத்தை எதிர்த்தோம் – கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியலையோ விமர்சிக்கும்போது முதலில் முன்வைக்கப்படும் அவதூறு, மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்ததற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸே காரணம் என்பதாகும்.
ஆனால், வரலாற்று உண்மை அதற்கு மாறானது. 1948ஆம் ஆண்டு மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த சட்டத்தை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்தது. அப்போது அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அந்தச் சட்டத்தை எதிர்த்தே வாக்களித்திருந்தார். எனினும், தமிழரசுக் கட்சியும் அதன் ஊடகமாகச் செயல்பட்ட சுதந்திரன் பத்திரிகையும் பரப்பிய அரசியல் குற்றச்சாட்டுகள் 76 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மத்தியில் தொடர்கின்றன.
கஜேந்திரகுமாரின் அரசியலை விமர்சிப்பவர்கள் அவரது தந்தையின் அரசியல் வரலாற்றைத் தவிர்த்துவிடுவார்கள் ஏனெனில் அவரை புலிகளே மாமனிதராக கௌரவப்படுத்திவிட்டார்கள் எனவே 76 ஆண்டிற்கு முன்னய அவரது பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் வரலாற்றை மட்டும் முன்னிறுத்துவார்கள். உண்மையை அறிய வேண்டுமானால், அரசியல் அவதூறுகளைத் தாண்டி வரலாற்று ஆவணங்களையும் அன்றைய அரசியல் முடிவுகளையும் ஆராய வேண்டும்.
மலையக மக்களின் குடியுரிமை விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? யார் உரிமையைப் பறித்த சட்டத்தை எதிர்த்தார்கள்? யார் குடியுரிமையை மீளப்பெறுவதற்கான வாய்ப்பை ஆதரித்தார்கள்? இந்த வரலாற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
1948ஆம் ஆண்டின் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தைத் தமிழ் காங்கிரஸ் எதிர்த்தது. மலையக மக்களில் பெரும்பான்மையினருக்குக் குடியுரிமை கிடைக்க வழிவகுத்த 1949ஆம் ஆண்டின் இந்திய–பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தையே ஆதரித்தோம். வரலாற்றைத் திரித்துக் குற்றஞ்சாட்டுவது நியாயமல்ல என்கிறார் கஜேந்திரகுமார்.
மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமைப் பிரச்சினை தொடர்பில் தமிழ் காங்கிரஸின் வரலாற்று நிலைப்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பது நியாயமற்றது. மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த 1948ஆம் ஆண்டின் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தைத் தனது பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் எதிர்த்தே வாக்களித்ததாகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் குடியுரிமை தொடர்பான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், தமிழ் காங்கிரஸின் வரலாற்று நிலைப்பாட்டை விளக்கி, குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் தமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார்.
1948ஆம் ஆண்டின் சட்டம்: குடியுரிமையைப் பறித்த நடவடிக்கை
முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்த 18/1948 இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. மாறாக, அந்தச் சட்டத்தை முழுமையாக எதிர்த்தே வாக்களித்தது.
இலங்கையில் இரண்டு தலைமுறைகள் வாழ்ந்ததை ஆவணங்கள் மூலம் நிரூபித்தால்தான் குடியுரிமை வழங்கப்படும் என்ற நிபந்தனை அந்தச் சட்டத்தில் விதிக்கப்பட்டிருந்தது. அன்றைய மலையக மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டால், அத்தகைய ஆவணங்களைப் பெரும்பான்மையான மக்களால் சமர்ப்பிக்க முடியாத சூழலே காணப்பட்டது.
இதன் விளைவாக, தலைமுறை தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்த மக்களே தமது சொந்த நாட்டில் குடியுரிமையற்றவர்களாக மாற்றப்பட்டனர்.
இந்த அநீதியை எதிர்த்ததுதான் தமிழ் காங்கிரஸின் நிலைப்பாடு. எனவே, மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த சட்டத்தைத் தமிழ் காங்கிரஸ் ஆதரித்ததாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கு முரணானது.
1949ஆம் ஆண்டின் சட்டம்: குடியுரிமையை மீளப்பெறுவதற்கான வாய்ப்பு
1948ஆம் ஆண்டின் சட்டத்தை மீளப்பெற வேண்டும் என்பதையே தமிழ் காங்கிரஸ் தனது அரசியல் கோரிக்கையாக முன்வைத்தது. பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவுடனான பேச்சுவார்த்தைகளிலும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஆனால், இலங்கை அரசு ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீளப்பெற மறுத்தது. அதற்குப் பதிலாக, இந்திய–பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்த முன்வந்தது.
அந்தச் சட்டத்தின் கீழ், இலங்கையில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்ததை நிரூபிப்பதன் மூலம் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்தால் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் தரப்புகள் முன்வைத்தன.
ஆனால், அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்களின் பின்னர், குடும்பம் ஒன்று ஏழு ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும் என்றும், தனிநபர் ஒருவர் பத்து ஆண்டுகள் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்திய–பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் 3/1949 இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.
85 சதவீத மக்களுக்கு வாய்ப்பளித்த சட்டத்தை யார் ஆதரித்தார்கள்?
கஜேந்திரகுமார் முன்வைக்கும் முக்கியமான வரலாற்று வாதம் இதுதான்:
1948ஆம் ஆண்டின் சட்டம் மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது. 1949ஆம் ஆண்டின் சட்டம் அந்தக் குடியுரிமையை மீளப்பெறுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கியது. இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து பேசுவது தவறான வரலாற்றுச் சித்தரிப்பாகும்.
அவரது உரையின்படி, 1949ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் மலையக மக்களில் ஏறத்தாழ 85 சதவீதத்தினருக்குக் குடியுரிமை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. அந்தச் சட்டத்தையே அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆதரித்தது.
ஆனால், அக்காலத்தில் தமிழ் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவின் பின்னர், செல்வநாயகம் தலைமையில் உருவான தமிழரசுக் கட்சியும், தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் அந்தச் சட்டத்தை எதிர்த்ததாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
குறிப்பாக, அந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அரசாங்கம் தனது சட்டத்தை மாற்றப்போவதில்லை என்பது தெளிவான பின்னரே, இறுதிக் கட்டத்தில் விண்ணப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதற்குள் கால அவகாசம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதனால், விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க முடியாத நிலையில் இருந்த சாதாரண மலையக மக்கள் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்ததாக அவரது வாதம் அமைகிறது.
அரசியல் தீர்மானங்களின் விளைவுகளை யார் பொறுப்பேற்பது?
இங்கு எழும் அடிப்படையான கேள்வி, ஒரு சட்டம் முழுமையான தீர்வை வழங்கவில்லை என்பதற்காக, அதன்மூலம் பெரும்பான்மையான மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பையும் நிராகரிப்பது சரியான அரசியல் முடிவா என்பதாகும்.
முழுமையான வெற்றியைப் பெற முடியாத சூழலில், குறைந்தபட்சம் 85 சதவீத மக்களுக்காவது குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்பை ஏற்றுக்கொள்வது தவறா? அல்லது அந்த வாய்ப்பையே நிராகரித்து, பெரும்பான்மையான மக்களை நாடற்றவர்களாகத் தொடரச் செய்வது சரியானதா?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல், தமிழ் காங்கிரஸ் மீது மட்டும் குற்றஞ்சாட்டுவது நியாயமல்ல என்பதே கஜேந்திரகுமாரின் வாதம்.
அவர் மேலும் குறிப்பிடுவதாவது, 1949ஆம் ஆண்டின் சட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அரசியல் பிரசாரத்தின் விளைவாக, மலையக மக்களில் பெரும்பான்மையினருக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கைநழுவியது. பின்னர் சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் நாடற்றவர்களாக இருந்த மக்களில் பெரும்பகுதியினர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் பிறந்து, இலங்கையிலேயே வாழ்ந்து, தங்களை இலங்கையர்களாகக் கருதிய மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியாவுக்கு அனுப்பும் நிலை உருவானதற்கு அந்த ஒப்பந்தத்தை ஆதரித்த அரசியல் தரப்புகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
மன்னிப்புக் கோரத் தயார்; ஆனால் வரலாறு முழுமையாகப் பேசப்பட வேண்டும்
மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினையில் தமிழ் காங்கிரஸின் நிலைப்பாட்டை விளக்குவதோடு, தனது தரப்பின் அரசியல் முடிவுகள் குறித்த விமர்சனங்களுக்கும் பதிலளிக்க அவர் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
85 சதவீத மக்களுக்குக் குடியுரிமை கிடைக்கக்கூடிய சட்டத்தை ஆதரித்தது தவறு என்று மலையக மக்கள் கருதினால், அதற்காக நிபந்தனையற்ற முறையில் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதேவேளை, மலையக மக்களின் பெரும்பான்மையினர் நாடற்றவர்களாக மாறுவதற்கும், அவர்களில் பலர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதற்கும் வழிவகுத்த அரசியல் தீர்மானங்களை ஆதரித்தவர்களும் தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலையக மக்களின் எதிர்காலமே இன்றைய அரசியல் முன்னுரிமை
வரலாற்று விவாதங்கள் ஒருபுறமிருக்க, மலையக மக்களின் இன்றைய வாழ்வாதாரம், கல்வி, பொருளாதாரம், காணி உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவையே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தற்போதைய நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக எந்தத் தரப்பினாலும் நேர்மையாக முன்வைக்கப்படும் எந்தத் திட்டத்தையும் முழுமனதுடன், எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரிக்கத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக இதுவரை பலமுறை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்திருக்கிறார் அவற்றையும் இங்கு இணைத்துள்ளோம்.