அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர், வழக்கறிஞர் கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் விளக்கமளித்துப் பதிலளித்தார்.
வரவிருக்கும் மாகாண சபை தேர்தல் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:
“மாகாண சபை முறைமை என்பது ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனைக்குரிய உண்மையான தீர்வாகவோ அல்லது தீர்வின் ஆரம்பப் புள்ளியாகவோ எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அது தமிழர்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இருப்பினும், தவறான சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றி அதனைப் பூரண தீர்வாகக் காட்டிவிடக் கூடாது என்பதற்காகவே, தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை எழுகிறது.
தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சூழலில், தற்போதே முதலமைச்சர் வேட்பாளர்களைப் பற்றிப் பேசி அதற்குப் பெரிய பிம்பத்தைக் கொடுப்பது, அந்த முறைமையை அங்கீகரிப்பது போலாகிவிடும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் உரிய நேரத்தில் எமது நிலைப்பாடும் வேட்பாளர் விபரங்களும் அறிவிக்கப்படும்.
தற்போது முதலமைச்சர் கதிரைக்காகப் போட்டியிடுபவர்கள் பதவி ஆசைக்காகச் செயல்படுகிறார்கள்; அந்தப் போட்டியில் நாங்கள் பங்காளியாக விரும்பவில்லை.”
அதேவேளை, 6 தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் அதன் அழைப்பு குறித்த கேள்விக்கு வழக்கறிஞர் சுகாஸ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்:
“குறித்த கூட்டணி எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது, அவர்களின் கொள்கை திட்டம் என்ன என்பதை அந்தப் பங்காளிகளே தெளிவுபடுத்த வேண்டும். எமக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான எவ்வித எழுத்துப்பூர்வ அழைப்பும் வரவில்லை.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ் தேச அங்கீகாரம் மற்றும் சர்வதேச நீதி விசாரணை சார்ந்த, தமிழ் மக்களின் நலன் சார்ந்த எந்தவொரு நேர்மையான முயற்சிக்கும் ஆதரவளிக்க நாங்கள் பின்னிற்கப்போவதில்லை.
ஆனால் 13-வது திருத்தம் அல்லது ஒற்றையாட்சி முறைமையை ஏற்கின்ற நிலையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அக்கூட்டணியில் உள்ள சில தமிழ் அரசுக்கட்சிப் பிரதிநிதிகள் ஏற்கனவே ஒற்றையாட்சி வரைவை வரைந்தவர்கள். எனவே அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் கொள்கைத் திட்டங்களைப் பொறுத்தே எமது கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.” என குறிப்பிட்டார்.