கடந்த காலத்தில் உயிரிழந்தவர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் நினைவுகூர்ந்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் பரிகார நீதிக்கான பேரணி செப்டம்பர் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் நடைபெறவுள்ளது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி, கடந்த கால இழப்புகளையும் துயரங்களையும் மறக்காமல், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய ஜனநாயக வெளிப்பாடாக அமையும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்ட குடும்பங்களுக்கு உண்மையும் நீதியும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும், போராட்டம் என்பது வன்முறை அல்ல; அது அநீதிக்கு எதிரான அமைதியான ஜனநாயகக் குரல் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் கட்சி பாகுபாடுகளைக் கடந்து, நீதிக்காக குரல் கொடுக்கும் உரிமையை மதித்து, ஜனநாயக வழியில் அமைதியாகவும் ஒழுக்கமாகவும் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.