சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“OMP-ன் ஏமாற்று நாடகங்கள் எங்களுக்கு இனி தேவையில்லை. இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் ஆவேசத்துடன் வலியுறுத்தினர்.
உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு OMP வழங்கும் நஷ்டஈடுகளையோ அல்லது இறப்புச் சான்றிதழ்களையோ தாங்கள் கோரவில்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கான நீதியும் உண்மையுமே தமக்கு வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அத்துடன், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதியை முன்னிட்டு, வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் சர்வதேச மாநாடு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

