யாழ்ப்பாணம், இளவாலையில் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமான தையல் மற்றும் புத்தகப் பை உற்பத்தி நிலையம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செ.கஜேந்திரன் அவர்களால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இளவாலை பகுதியில் இயங்கி வரும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு’, கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 1 மில்லியன் ரூபாய் (ரூபா 1,000,000/=) மதிப்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தையல் மற்றும் புத்தகப் பை உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செ.கஜேந்திரன் அவர்கள் நாடா வெட்டி உற்பத்திக் கூடத்தைத் திறந்து வைத்தார்.



