தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று தமிழக முதலமைச்சர் செயலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பை நிராகரித்தல், தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் ஆகிய விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கைகள் இச்சந்திப்புடன் தொடர்புடைய ஆவணங்களாக இணைக்கப்பட்டுள்ளன.
இச்சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிரேஷ்ட சட்டத்தரணியும் உத்தியோகபூர்வ பேச்சாளருமான க.சுகாஷ் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணியும் பிரசாரச் செயலாளருமான ந.காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

