தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலியமைப்பு, காவல்துறையின் அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் (SSP) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினர், ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி எழுத்துமூலமான கோரிக்கையுடன் யாழ்ப்பாணம் காவல்துறையினரை அணுகியுள்ளனர். எனினும், அப்போது தலைமைப் பொலிஸ் பரிசோதகர் (HQI) அங்கு இல்லை எனக் கூறி, விண்ணப்பத்தை மறுநிகழ்வு தினமான இன்று சமர்ப்பிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் ஏற்பாட்டாளர்கள் எழுத்துமூலமான கோரிக்கையுடன் சென்றபோதும், காவல்துறையினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இது குறித்து யாழ்ப்பாணம் SSP-யிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எடுத்துரைத்ததை அடுத்து, தாம் தலைமைப் பொலிஸ் பரிசோதகருடன் பேசி, ஏற்பாட்டாளர்களை மீண்டும் அனுமதி கோருமாறு அறிவுறுத்துவதாக SSP உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் HQI தம்மை தொடர்புகொண்டு, ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி ஏற்பாட்டாளர்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும், புலனாய்வுத் தகவல் அறிக்கை (Intelligence Report) பெறப்பட்ட பின்னரே இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று HQI தனக்குத் தெரிவித்ததாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.