ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், நீதி போராட்டத்திற்காகவும் சர்வதேச அளவில் குரல் கொடுத்த மனிதவுரிமைச் செயல்பாட்டாளர் வீராஜ் மெண்டிஸ் அவர்களின் மறைவு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குக்குப் பிறகு தமிழ் மக்கள் சந்தித்த மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக வீராஜ் மெண்டிஸ் அவர்களின் மறைவு பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை நோக்கத்திற்கு எதிராக உலக அரங்கில் வலுவான சான்றுகளை முன்வைத்தவர் வீராஜ் மெண்டிஸ். டப்ளின் (Dublin) மற்றும் பிரேமன் (Bremen) நகரங்களில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயங்களை (People’s Tribunals) ஒருங்கிணைத்து, தமிழினப்படுகொலையை சர்வதேச அளவில் நிரூபிப்பதில் இவர் மிக முக்கிய பங்காற்றினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த வீராஜ் மெண்டிஸ், சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இறுதி மூச்சு உள்ளவரை உண்மையாகவும் சமரசமின்றியும் உறுதுணையாக இருந்தார்.
“தமிழினப் போராட்டத்தின் போக்கில் ஒருவேளை நாங்கள் தளர்ந்துபோனாலும், வீராஜ் மெண்டிஸ் போன்ற தலைசிறந்த சிங்கள மனிதவுரிமைப் போராளிகள் ஒருபோதும் தளரமாட்டார்கள்” என்று மூத்த செயல்பாட்டாளர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிட்ட நினைவுகள் இன்றும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
வீராஜ் மெண்டிஸ் அவர்களின் மறைவு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாக இருப்பினும், ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் மூட்டிய விடுதலைச் சுடரும் அவரது லட்சிய உறுதிப்பாடும், உலகளவில் நீதிக்காகப் போராடும் அனைத்துத் தோழர்களின் மனங்களிலும் தொடர்ந்து எரியும் என்பதே அனைவரின் நீங்காத நம்பிக்கையாக உள்ளது.