கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரத்தில், அரசாங்கத்தின் பின்னணி உள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தங்களது கலாச்சார சீருடையுடன் (ஹிஜாப்) பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கலாச்சார சீருடை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மட்டும் எவ்வாறு சுற்றறிக்கையைக் சுட்டிக்காட்டி மறுக்கப்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “மத மற்றும் கலாச்சார அடையாளங்களை மதிப்பது அடிப்படை மனித உரிமையாகும். எனவே, குறித்த முஸ்லிம் பெண் ஊழியர்களை வேறு இடங்களுக்கு மாற்றாமல், அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலேயே தங்களது கலாச்சார ஆடைகளுடன் தொடர்ந்து பணியாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.