சென் மேரீஸ் உதைபந்தாட்ட அணியினரை கெளரவிக்கும் நிகழ்வு!
FFSL Champions Cup தொடரில் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்து, நாவாந்துறை மண்ணுக்கும் ஒட்டுமொத்த யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழக உதைபந்தாட்ட அணியினரைக் கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா 24.05.2026 அன்று மாலை நாவாந்துறை மாதா கோவில் முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 11.04.2026 அன்று அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் (FFSL) நடத்தப்பட்ட FFSL Champions Cup தொடரில் பங்கேற்ற சென். மேரிஸ் அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்திருந்தது.
இவ்வெற்றியின் மூலம் நாவாந்துறைப் பிரதேசத்திற்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சென். மேரிஸ் அணியின் வீரர்களைக் கௌரவித்தனர்.
விளையாட்டுத் துறையில் இளம் தலைமுறையினரின் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், நாவாந்துறை மண்ணின் விளையாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும் இப்பாராட்டு விழா அமைந்திருந்தது.






























