தியாகத்தாய் அன்னை பூபதியின் 38-ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, உடுப்பிட்டி தொகுதி மக்கள் தொடர்பகத்தில் நேற்றைய தினம் மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது.
நெல்லியடி – கொடிகாமம் வீதியில் அணிஞ்சிலடியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உடுப்பிட்டி தொகுதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
உடுப்பிட்டி தொகுதிச் செயலாளர் திரு. கிருஷ்ணபிள்ளை பிரகலாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், லெப். கேணல் குயில் அவர்களின் தாயார் திருமதி. தெய்வேந்திரம் வனிதாமணி அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் வல்வெட்டித்துறை நகர பிதாவுமாகிய மதிப்பிற்குரிய திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ், யாழ் மாவட்டச் செயலாளர் சட்டத்தரணி க. மகிந்தன், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு அன்னைக்கு வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர், முன்னாள் உப தவிசாளர்கள், பருத்தித்துறை நகரசபை கௌரவ தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அன்னை பூபதி அவர்களின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழினத்தின் உரிமைக்காகவும், இந்திய அமைதி காக்கும் படையினரின் அநீதிகளுக்கு எதிராகவும் அறப்போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்த அன்னை பூபதியின் தியாகம் இந்நாளில் நினைவு கூரப்பட்டது.







