சாவகச்சேரி சந்தை தொகுதி வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து கலந்துரையாடும் கள விஜயமொன்று இன்று இடம்பெற்றது.
இன்றைய தினம் (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், சாவகச்சேரி நகரசபையின் கௌரவ தவிசாளர் வடிவேல் சிறிபிரகாஸ், நகரசபை கௌரவ உறுப்பினர் ஆஷா ஜெயகுமார் (ஜெயபிரதாஸ்) மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சந்தை தொகுதியில் வியாபாரிகள் அன்றாடம் வரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. வியாபாரிகளின் கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச் செவிமடுத்த பிரதிநிதிகள், அவற்றுக்கான உரிய தீர்வுகளை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மக்களினதும் வியாபாரிகளினதும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குச் செவிசாய்த்து, அவற்றுக்குரிய நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எப்போதும் களத்தில் நின்று செயலாற்றும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.



