அனோஜனின் பாதுகாப்பு, அவர் மீதானதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் விடுதலை தொடர்பான விடயங்கள் குறித்து இன்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியுடன் சந்தித்துக் கலந்துரையாடியதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் தானும் அனோஜனின் தம்பியும் சமூகச் செயற்பாட்டாளர் ரஜீவ்காந் அவர்களும் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அனோஜனின் விடுதலைக்கான கோரிக்கையை உலகளாவிய பிரச்சாரமாக முன்னெடுக்கப் போவதாகவும் கூறினார்.
முஸ்லிம் சமூகத்தினருடன் சகோதரத்துவ உறவைப் பேணி வரும் நிலையில், சிலர் இந்த விவகாரம் தொடர்பாக மோசமான கருத்துகளை வெளியிடுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த கஜேந்திரகுமார், சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அர்த்தமற்ற வாதங்களில் ஈடுபடாமல், பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான நடவடிக்கைகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இன்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடனான சந்திப்பில் தாம் தெரிவித்த அனைத்து விடயங்களும் உண்மையானவை என்றும், அவற்றையே தம்மால் உறுதியாகக் கூற முடியும் என்றும் ரஜீவ்காந் தெரிவித்தார்.
