தியாக தீபம் சிலை மீண்டும் நிறுவப்படவேண்டும்- நடராஜர் காண்டீபன்(காணொளி )
யாழ்ப்பாணம்: நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்டமைக்கு தமிழ் தேசிய செயற்பாட்டாளர் நடராஜர் காண்டீபன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், திலீபன் அகிம்சை வழியில் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டமும் அவர் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகளும் இன்றளவும் நிறைவேற்றப்படாத நிலையில், அவரது நினைவுச் சிலை அகற்றப்பட்டிருப்பது தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் புறக்கணிக்கும் செயல் எனக் குறிப்பிட்டார்.
1987ஆம் ஆண்டு திலீபனின் நினைவாக நிறுவப்பட்டிருந்த சிலை 1996ஆம் ஆண்டு அகற்றப்பட்டதாகவும், பின்னர் 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளிலும் இதுதொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அகிம்சை வழியில் போராடிய திலீபனின் நினைவை ஒடுக்க முயற்சித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திலீபன் மற்றும் பூபதி அம்மாவின் நினைவுகளை முன்னிறுத்தி நினைவேந்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காண்டீபன் தெரிவித்தார். குறிப்பாக, கிழக்கிலிருந்து வடக்கிற்கு நினைவுகளை எடுத்துச் செல்லும் ஊர்திப் பயணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
திலீபனின் உருவச்சிலை என்பது வெறுமனே ஒரு சிலை அல்ல என்றும், அது தமிழ் மக்களின் உரிமை, உணர்வு மற்றும் வரலாற்றுடன் தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு–கிழக்குப் பகுதிகளில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு அரச பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதேவேளை தமிழ் மக்களின் வரலாற்று நினைவுகளுடன் தொடர்புடைய சிலை அகற்றப்படுவது பாரபட்சமான அணுகுமுறை என விமர்சித்தார்.
“திலீபன் வழியில் அகிம்சை முறையிலான போராட்டத்தை முன்னெடுத்து, அவரது நினைவுச் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்தார்.
திலீபனின் நினைவுச் சிலை மீண்டும் நிறுவப்படும் வரை போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய பற்றாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஊடகங்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் நடராஜர் காண்டீபன் தெரிவித்தார்.
திலீபனின் நினைவை இந்த மண்ணில் மீண்டும் நிலைநிறுத்தும் வரை தாம் ஓயப்போவதில்லை எனவும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.