யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது வெளிப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து முழுமையான மற்றும் தீவிரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். தினக்குரல் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், இப்பகுதியில் பதிவான மனித எச்சங்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணைகள் கோரப்பட்டுள்ளன. பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களான வைத்திலிங்கம் கிருபாகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தரப்பினர் இது குறித்துக் குரல் கொடுத்துள்ளனர்.
சந்தேகத்தின் பின்னணி: கடந்த 1995 மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சிறீலங்கா இராணுவத்தினராலும், அவர்களுடன் இணைந்து இயங்கியதுணை இராணுவக் குழுக்களாலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய எச்சங்களாக இது இருக்கக்கூடும் என கடும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்: மயானத்தில் கட்டுமானப் பணிகள் தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்டபோது வெளிப்பட்ட இந்த மனித எச்சங்கள் எமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன என்பது குறித்து பக்கச்சார்பற்ற, வெளிப்படையான நீதியான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரும் இவ்வாறான விவகாரங்கள் தொடர்பில் உரிய துறையினர் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த தடயவியல் மற்றும் சட்டபூர்வ விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.