போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தக் கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையின் கீழ் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மன்னாரில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் பிரதான வீதிக்கு முன்பாக வியாழக்கிழமை (10) நடைபெற்ற இந்நிகழ்வை, மன்னார் பிரஜைகள் குழு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையும் தமிழர் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இக்கையெழுத்துப் போராட்டத்தில், தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ. குணசீலன், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயேஸ், முன்னாள் உப தலைவர் அந்தோனி மார்க், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ. ஏ. அந்தோனி மார்க், எழுத்தாளர் வி. எஸ். சிவகரன், வடமாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
இதன்போது, மன்னாரில் உள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டத்தில் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.



